மானுடவியலின் ஒரு பிரிவாக வளர்ந்திருக்கும் இனவரைவியல், குறிப்பிட்ட மக்கட் பிரிவினரின் சமுதாய அமைப்பை, கலாசாரத்தை அறிவியலடிப்படையில் விவரிக்கின்ற ஒரு துறையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவான இத்துறை, மக்களின் தோற்றம் மற்றும் புற இயற்கைச் சூழல் நிலை, சமுதாய நிலை (பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் முதலானவை), அறிவு மற்றும் கலாசார நிலை ஆகியவற்றை ஆராய்வதில் கவனம் செலுத்தியது. கள ஆய்வையும் அனுபவ வாதத்தையும் அடிப்படையாகக் கொண்ட இன வரைவியல், காலனியத் தோற்றகாலப் பயணியர் மற்றும் மிஷனரிமார்களின் எழுத்துக்களினூடே வளர்ந்தது. இத்துறை, சமூக பண்பாட்டு மானுடவியல் துறை சார்ந்தது என்றாலும் அவ்வறிவுத்துறை எல்லையைக் கடந்து சமூகவியல், வரலாறு, தகவல், தொடர்பியல், மொழியியல், பண்பாட்டு ஆய்வியல், நாட்டார் வழக்காற்றியல் ஆகிய பல துறைகளில் பயன்படுத்தப்படுகிற பல்வேறு அறிவுப் புலங்களைக் கடக்கிற ஓர் ஆய்வு அணுகுமுறையாக விளங்குகிறது.