உலகத்தில் நடக்கும் எந்த நிகழ்வும் சிலரைப் பாதிப்பதே இல்லை. அப்படியானால் அவர்கள் ஞானிகளோ என்றும் எண்ண வேண்டாம். வெகு சுயநலவாதிகள் . தீ விபத்தோ , மத்த்தின் பேரால் நடக்கும் மடத்தனமோ, அரசியல் அசிங்கமோ எதுவுமே
அவர்களைப் பாதிப்பதே இல்லை. மதத்தின் பெயரால் நடக்கும் மடத்தனத்தை எதிர்க்கிறேன். மதங்களின் பகைமையை எதிர்த்து
முடிவுகட்ட நினைக்கிறேன். தமிழ் தெய்வ மொழி அல்ல என்பவர்களின் மண்டையில் குட்டி இருக்கிறேன். சமயப் பிரச்சாரம் என்றன பெயரில் உளறுபவர்களை வாய் மூட வைத்திருக்கிறேன். வீட்டில் இருந்து வெளியேறி ஆசிரமங்களில் போய்விட்டால் ஆன்மிகவாதியாகி விடலாம் என்று ஏமாறுகிற அசடுகளை நன்றாக அடையாளம் காட்டி இருக்கிறேன். மனம் விரிவடைய, மானுடம் மலர்ச்சி பெற, மக்கள் உயர்வு பெற, மகரந்த எழுத்துக்களை மனம் களிக்கத் தூவி இரைத்திருக்கிறேன். மதம் வேறு, ஆன்மிகம் வேறு என்று ஓங்கி உரைத்திருக்கிறேன். சில நேரம் புரட்சி, சில நேரம் மலர்ச்சி, சில நேரம் வளர்ச்சி, சில நேரம் பயிற்சி என்றனு புத்தகம் முழுவதும் இதொரு விதமான விஷயங்களை விதைத்திருக்கிறேன். என் பேனா முனை, ஒரு சிற்பியின் உளி போல மேலான தனிமனிதனைச் செதுக்கவும், புதியதோர் உலகம் புதுக்கவும் எழுதுகிறது என்பதனை என் எல்லாப் புத்தகங்களையும் போல இந்தப் புத்தகமும் நிரூபிக்கும் ... கருமலை மீது ஜொலிக்கும் கார்த்திகை தீபம் போல காகித மலை மீதி வைத்த கருத்து தீபமே இந்நூல்.